அதிகரிக்கும் நாய்கள் தொந்தரவினால் அவதி

76பார்த்தது
அதிகரிக்கும் நாய்கள் தொந்தரவினால் அவதி
பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். தவிர, பழநி கோயிலுக்கு சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில தினங்களாக பழநி பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நடந்து செல்வோர், பைக்குகளில் செல்வோரை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து வருகின்றன. நகரின் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரியாத நிலையில், தெருநாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர்.

நகர் முழுவதும் நாய்கள் கூட்டம் கூட்டமாக, சுற்றித்திரிந்து வருவதால் மக்கள் வெளியில் நிம்மதியாக நடமாட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, வாகனங்களுக்குள் விழுந்து விடுவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி தற்போது தெருவில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, தற்போது நாளொன்றிற்கு 10 பேர் வரை நாய்க்கடி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் தேவையான அளவிற்கு மருந்துகள் உள்ளன. நாய்கடிக்கு ஆளாகி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி