திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் ஒட்டுமொத்த துாய்மைப்பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் வியாழக்கிழமை மாலை 6. 30 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி ஒவ்வொரு அலுவலக அறையாக நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான அரசு அலுவலகங்கள் சுத்தமாக இருக்கும்பட்சத்தில் அலுவலர்கள் ஆரோக்கியத்துடன், உற்சாகமாக பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசுப் பணிகள் விரைவாக நடைபெற்று மக்கள் பணிகள் நிறைவேறும். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் முழுவதும் தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கில், நம்மை சுற்றியுள்ள பகுதிகளை நாமே சுத்தம் செய்ய முன்வர வேண்டும் என்ற அடிப்படையில், இன்றைய தினம் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள், அலுவலக மேற்கூரைகளில் தேங்கி கிடக்கும் இலை போன்ற சருகுகள், கழிப்பறைகள் மற்றும் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் குப்பைகள் மற்றும் செடி, கொடிகள் அனைத்தும், அனைத்துத்துறை அலுவலர்கள் மூலம் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, மகளிர் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.