பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அருகே, மழைக்காலங்களில் விதைப்பதற்காக அரசு பள்ளி மாணவர்கள், 15 ஆயிரம் விதை பந்துகள் தயாரித்தனர். நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கோவிந்தராசு தலைமையில், 300 மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் இணைந்து, மழைக்காலங்களில் விதைப்பதற்காக, 15 ஆயிரம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.
குறைந்து வரும் காற்று, மழையை கருத்தில் கொண்டும், அழிந்து வரும் மரங்களை நட்டு வளர்க்க ஏதுவாக களிமண்ணில் விதைகளை உள்ளே வைத்து, பந்து போல உருண்டை பிடித்து தயார் செய்தனர். மழைக்காலங்களில் காடு, குளம், ஏரி, ஆற்றங்கரைகளில் வீசினால் அதில் உள்ள விதைகள் முளைத்து மரமாக வளரும். இந்த வகையில் மரங்களை வளர்க்கும் நோக்கில் விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர்.
இதை முன்னிட்டு, மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் வேலு முன்னிலையில் பேரணி நடந்தது. சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பதாகைகள் ஏந்தி மோட்டாங்குறிச்சி, பெத்தானுார், நத்தமேடு கிராமங்களில் மாணவ, மாணவியர் பேரணி நடந்தது. பள்ளியின் பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் தீர்த்தமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.