தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 60-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதை அடுத்து சாமிக்கு கந்த சஷ்டி லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று வருகிற 7-ம் தேதி (மதியம் வரை தினமும் 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.