அரூர் பகுதியில், நெற்பயிரில் நோய் தாக்குதல் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், நரிப்-பள்ளி, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம், மாம்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, பறையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 6, 000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதற்காக அவர்கள் ஏக்கர் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்துள்ளனர்.
தற்போது நெற்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள நிலையில், அதில் ஆனைக்கொம்பன், வெள்ளை முறியான், செம்பை நோய் மற்றும் இலைக்கணு புழு தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயிர்களின் வளர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், மகசூலும் பாதிக்கப்படும். நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, தீவிர நோய்எதிர்ப்பு சக்தி மருந்துகளை வயல்களில் தெளித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் விவசாயிகள் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.