கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வஞ்சிக்கோடு பகுதியைச் சேர்ந்த சதீஷன் மற்றும் அம்பிகா ஆகியோரே நேற்று காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வனவளங்களை சேகரித்து வந்த இவர்களை காட்டுயானைகள் துரத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.
நேற்று முதல் காணாமல் போன இருவரையும் அப்பகுதி மக்கள் தேடி வந்த நிலையில், இன்று காலை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் அதிரப்பள்ளி பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.