பொள்ளாச்சி, திவான்சாபுதூர் கிராமத்தில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிசக்தி நாடு காணியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று (நவம்பர் 29)காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருவிளக்கு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலையில் வேள்வி வழிபாடுகள் ஆகியவை சிவாச்சாரியார்கள் மூலம் நடத்தப்பட்டன. இன்று காலை நடைபெற்ற முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தின் போது, சிவதாளங்கள் முழங்க, யாகசாலையில் நான்கு கால வேள்வி வழிபாடு செய்யப்பட்டது.
அதன் பிறகு, புனித நீர் குடங்களை தலையில் ஏந்தியபடி கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, நாடு காணியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.