கோவை மாவட்டம் சூலூர் தீயணைப்புத் துறையின் சார்பில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி செஞ்சேரி மலைப் பகுதியில் உள்ள மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோவிலில் இன்று சிறப்பாக நடைபெற்றது. மலைகளில் சிக்கிக்கொள்ளும் நபர்களை மீட்பது தொடர்பான மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது.
நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் தீயணைப்புப் படை வீரர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு நடைமுறைகள் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகையின்போது, மலைகளில் சிக்கியவர்களை மீட்பது, கயிறுகள் மூலம் பாதுகாப்பாக கீழே இறங்குவது, முதலுதவி அளிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டன.
இந்த ஒத்திகை பயிற்சியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். பேரிடர் காலங்களில் தீயணைப்புத் துறையின் தயார்நிலையை அறிந்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.