கோவை வடகோவை, கிழக்கு பொன்னுசாமி வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (37). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ரோடு பொன்னுசாமி வீதியில் தனது பைக்கை நிறுத்தி பணிக்கு சென்றார். மறுநாள் காலை பணியை முடித்து பைக்கை எடுக்க வந்தார். அப்போது அவர் தான் நிறுத்தி இருந்த இடத்தில் பைக் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் பைக் கிடைக்காததால் சத்தியமூர்த்தி ஆர்எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 18) போலீசார் ஆர்எஸ் புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் அது திருட்டு போன சத்தியமூர்த்தியின் பைக் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பைக்கை மீட்டு, அதனை ஓட்டி வந்தவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த புகழேந்தி (45) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.