பொள்ளாச்சி அருகே கொல்லப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உணவை உண்ட 6 குழந்தைகள் வாந்தி எடுத்ததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அங்கன்வாடி மையத்தில் நிதின் மற்றும் மிதுன் கிருஷ்ணா ஆகிய இரு குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்த வந்த 4 குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகியோர் நேற்று மதிய உணவை வழங்கியுள்ளனர். உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே சிறிதளவு உணவை உட்கொண்டிருந்தனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. பதறிய பணியாளர்கள் உடனடியாக பெற்றோர்களின் உதவியுடன் குழந்தைகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது குழந்தைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, அங்கன்வாடி மையத்தில் பணியில் இருந்த சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நெகமம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.