மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையின் சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது. சொக்கம்புதூர் மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த மாசாணியம்மன் களிமண் உருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றன.
பூசாரி ஒருவர் கையில் அரிவாள் மற்றும் சூலாயுதம் ஏந்தியபடி, மாசாணியம்மன் உருவத்தை சுற்றி ஆக்ரோஷ நடனமாடினார். பின்னர், மாசாணியம்மன் இதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் இருந்த மனித எலும்பை வாயில் கடித்தபடி நடனமாடினார். இந்த வினோதமான பூஜை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர், மாசாணியம்மன் உருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், ஊர்வலமாக சொக்கம்புதூரில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக சக்தி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.