கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், சுவாமி ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் ரஞ்சித் மற்றும் கானா பாடகி இசைவாணி மீது போலீசில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒரு புகார் மனு அளித்தனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார நிர்வாகத்தினரான இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.