கோவை அனுப்பர்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் கடவுளே! அஜித்தே! என்று முழங்கினர். ₹300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
நேற்று (நவம்பர் 6) இந்நிகழ்வில் கலந்து கொண்ட அஜித் ரசிகர்கள் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் கடவுளே! அஜித்தே! என்று முழங்கினர். தற்போதைய சூழலில் கடவுளே! அஜித்தே! என்ற முழக்கம் அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்கள், கூட்டங்கள், பொது இடங்கள், வெளிநாட்டின் பல்வேறு பகுதிகளில் முழங்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த முழக்கம் தற்போது முதலமைச்சர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியிலும் தொடர்ந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.