கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரக் கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. பயிர்களைச் சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க விவசாயிகள் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், மாங்கரை அருகே உள்ள டைமண்ட் பேக்டரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கிளி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவத்தின்று, டைமண்ட் பேக்டரி வளாகத்தில் பறந்துகொண்டிருந்த கிளி மின்வேலியில் அமர்ந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் நேற்று (பிப்ரவரி 12) சம்பவ இடத்திற்கு விரைந்து கிளியின் உடலைக் கைப்பற்றினர்.
வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இரவு நேரங்களில் மட்டும் மின்வேலிகளில் மின்சாரம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து கிளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திவருகிறோம் என்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.