ரூ. 11 லட்சம் இழந்த பெண்: போலீசார் விசாரணை

77பார்த்தது
ரூ. 11 லட்சம் இழந்த பெண்: போலீசார் விசாரணை
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷப்னம், 29. ஐக்கிய அரபு எமிரேட் நாடான துபாயில் இருந்து, இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு, பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த டெலிகிராம் 'லிங்க்'கை தொட்டுள்ளார்.

உடனே, 'டெலிகிராம்' குழு ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் ஏற்கனவே இருந்த நபர்கள், 'ஆன்லைன்' முதலீட்டில் அதிக லாபம் சம்பாதித்து இருப்பதாகவும், ஆதாரங்களாக சில 'ஸ்கிரீன் ஷாட்' பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவற்றை உண்மை என நம்பிய ஷப்னம், அதில் கொடுக்கப்பட்டிருந்த வலைதள பக்கத்தில் இணைந்து, முதலில் சிறிய தொகை முதலீடு செய்துள்ளார். அப்போது அவருக்கு 5, 000 ரூபாய் லாபமாக வந்துள்ளது.

அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், 10. 85 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளார். ஆனால், லாபமும் வரவில்லை; முதலீட்டு பணமும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, சேத்துப்பட்டு பகுதியில் உள்ள, 'சைபர்' குற்றத்தடுப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.