5 மாதங்களில் வணிக வரி ரூ. 6, 091 கோடி கூடுதலாக வசூல்: அமைச்சர்

59பார்த்தது
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ. 6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிக வரி வளாக கூட்ட அரங்கில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிகவரி ஆய்வு குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் எஸ். ஞானக்குமார் மற்றும் குழுவினருக்கு அமைச்சர் பி. மூர்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அதன்பின் பேசிய அமைச்சர், வணிக வரித் துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் அலுவலர்களின் செயல்பாட்டால், வணிக வரித் துறையின் மொத்த வரி வருவாய் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 55, 807 கோடியாக உள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ. 49, 716 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரூ. 6, 091 கோடி கூடுதலாகும். சரக்கு மற்றும் சேவை வரி வசூலை பொருத்தவரை, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 31, 338 கோடியாக இருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ. 26, 767 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் வணிக வரி ஆணையர் டி. ஜகந்நாதன், இணை ஆணையர் துர்காமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி