சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக ஒருங்கிணைப்பில் சென்னையில் 20 ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை.
சமூகநீதிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூகநீதி கூட்டமைப்புக் கட்சிகள் இணைந்து வரும் 20 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தவிருக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே. வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி. செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.