வேலை வாங்கி தருவதாக வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளிய நபர் கைது செய்யபட்டுள்ளார். எனவே, ஊடுருவல்காரர்கள் தஞ்சமடையவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும் ஏற்ற சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கதேச பெண் ஒருவர் திரிபுரா மாநில அகர்தலா பகுதியை சேர்ந்த முகமது யாசின் மியா என்பவனை காதலித்துள்ளார். அவர் அந்த பெண்ணுக்கு போலி ஆதார் அட்டை உருவாக்கி கொடுத்துள்ளார். வேலை வாங்கி தருவதாக அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளியது கண்டறியபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தில் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இந்த வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை சம்பவம் போல இன்னும் எத்தனை பேர் ஊடுருவி இருக்கிறார்கள்? அதன் பின்புலத்தில் இயக்குபவர்கள் யார்? ஆயிரம் கி. மீ. அப்பால் உள்ளவர்கள் தமிழகத்தை தேர்வு செய்வது ஏன்? அவர்களுக்கு இங்கே உதவியும் ஒத்துழைப்பும் தருவது யார்? என்பன போன்றவற்றை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.