உற்பத்தியை 25% உயர்த்த காற்றாலை மின் திட்ட கொள்கை வெளியீடு

61பார்த்தது
உற்பத்தியை 25% உயர்த்த காற்றாலை மின் திட்ட கொள்கை வெளியீடு
உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்கும் வகையில் காற்றாலை மின்திட்டக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1984-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல், மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய மூன்று திட்டங்களுக்கு வழி செய்யும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்படுகிறது. இக்கொள்கையின்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலையின் ஆயுள்காலத்தை நீட்டிக்க முடியும். இதற்கு சம்பந்தப்பட்ட காற்றாலையின் வாயிலாக கடந்த மூன்றாண்டுகளில் 90 சதவீதம் மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

காற்றாலை மின்சாரத்தை உற்பத்தியாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திடம் வழங்கி தேவைப்படும்போது வாங்கிக் கொள்ளலாம். உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீத மின்சாரத்தை மின் வாரியம் கொள்முதல் செய்யும். ஆயுள் நீட்டிப்புக்கு வளர்ச்சிக் கட்டணமாக ஒரு மெகாவாட்டுக்கு ரூ. 30 லட்சத்தை எரிசக்தி கழகத்துக்குச் செலுத்த வேண்டும்.

இந்த கொள்கை வரும் 2030-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையோ, அடுத்த கொள்கை வெளியிடும் வரையோ அமலில் இருக்கும். இதன் மூலம் தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தியை மேலும் 25 சதவீதம் அதிகரிக்க முடியும். 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் மின் கட்டமைப்பில் 50 சதவீதம் பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கை அடைய புதிய கொள்கை வழிசெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி