சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை கண்காணிக்கவும், செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டங்களையும் மதிப்பாய்வு செய்வார்கள்.
சென்னை மாவட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்குநர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும், கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.