அடையாறு, பெருங்குடியில் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேரம் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிழக்கு கடற்கரை சாலை (ECR) 6 வழி சாலையாக மாற்றப்படுவதால் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள, நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயை மாற்றி அமைக்கும் பணிகள் விஜிபி வளாகம் எதிரில் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (அக்.6) மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை (24 மணி நேரம்) அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட திருவான்மியூர், பெசன்ட் நகர், கலாசேத்திரா காலனி, இந்திரா நகர் (பகுதி), கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-45674567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.