சென்னை புதுவண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே போதை பொருள் விற்பது தொடர்பாக கடந்த 2021 செப்டம்பர் 3ம் தேதி புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, போதை பொருள் விற்றுக் கொண்டிருந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த சதீஷ் (எ) மாங்கா சதீஷ், குரு பிரசாத், கமரூதின் ஆகியோரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, சதீஷிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 1260 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நேரத்தில் மற்ற இருவர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி பின்னர் சரணடைந்தனர். இந்த வழக்கு சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே. ஜெ. சரவணன் ஆஜராகி, போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே 12 குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், போதை பொருள் விற்ற குற்றத்திற்காக சீஷ் (எ) மாங்கா சதீசுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குரு பிரசாத், கமரூதின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்தார்.