நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும், உருகுலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர எ. வ. வேலு, நாமக்கல் கவிஞர் மாளிகை என்பது, 1974-ல் கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஒரு மாளிகை. இங்குதான், தலைமைச் செயலகத்தின் முழு அலுவலகமும் இருக்கிறது. இதன் முதல் தளத்தில், வேளாண்மைத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில், திடீரென விரிசல் ஏற்பட்டது என்றொரு பீதி, அலுவலகத்தில் ஏற்பட்டதால், அலுவலகத்தில் பணியில் இருந்த அனைவரும், வெளியே வந்துவிட்டனர்.
இந்த செய்தி கிடைத்தவுடனே, இங்கு வந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும், உருகுலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது. தரைதளத்தில், 14 ஆண்டுகளுக்கு முன்பாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. அப்போதெல்லாம் 2க்கு 2, 2க்கு 4 என்ற டைல்ஸ்கள் எல்லாம் தயாரிக்கப்படாத காலம். 1க்கு1 என்ற அடிப்படையிலான டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டிருந்த காலம் அது. எனவே, இதெல்லாம் அந்த காலக்கட்டத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் என தெரிவித்தார்.