சிறை கைதிகளை மட்டுமின்றி, ஆர்டர்லியாக காவல் துறையினரையும் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்ய பணிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி தனது வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று, பின்னர் நகை, பணத்தை திருடியதாக அவரை தாக்கி சித்ரவதை செய்ததாக அவரது தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “டிஐஜி-யான ராஜலட்சுமிக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். அதேபோல இந்த வழக்கை விசாரணை நீதிமன்றமும் விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்ட டிஐஜி மீது தமிழக அரசு துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைக் கைதிகள் இதுபோல அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்களா என்பது குறித்து சிறைத் துறை டிஜிபி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஆர்டர்லியாக காவல் துறையினரையும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது. அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுபோல அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது தீவிரமாக பார்க்கப்படும் என எச்சரித்துள்ளனர்.