சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு ஒருநாள் தடை

77பார்த்தது
தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முந்தைய தினங்களை போலவே அதிமுக நிர்வாகிகள் இன்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

தொடர்ந்து இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளி செய்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.

சட்டப்பேரவையில் தொடர்ந்து அதிமுக அமளியில் ஈடுபட்டு வருவதால் அமைச்சர் கே. என். நேரு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின், அதிமுகவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேறினர்.

தொடர்புடைய செய்தி