உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: நவ. 25-28ல் மிக கனமழை
நவ. 25 முதல் நவ. 28 வரை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8. 30 மணி அளவில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவ. 24-ம் தேதி, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நன்றி ஏஎன்ஐ