சென்னையில் மாற்று திறனாளி வீரர்களுக்கு விளையாட்டு விடுதி

57பார்த்தது
சென்னையில் மாற்று திறனாளி வீரர்களுக்கு விளையாட்டு விடுதி
சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்காக விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 62 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 1. 11 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஊக்கத் தொகையுடன் 6 விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 10. 90 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் அதிநவீன சைக்கிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

ரூ. 27. 18 கோடி ஊக்கத்தொகை:  அதைத்தொடர்ந்து அவர் பேசும்போது, பாரா விளையாட்டு வீரர்களுக்காக சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கடலூர் ஆகிய இடங்களில் ரூ. 7. 38 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ரூ. 7. 05 கோடி மதிப்பில் புதிய பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளன. மேலும் சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி