கோயில் நிலம் கொள்ளை போவதை இந்து சமய அறநிலையத் துறை வேடிக்கை பார்ப்பதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகில் உள்ள கிருஷ்ண பேரி எனும் இடத்தில் ஜக்கம்மா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்பிலான இடத்தை, ஜக்கம்மா அறக்கட்டளை என்ற பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதன் மீதான வழக்கு 2019ல் இருந்து நிலுவையில் உள்ளது.
முறைகேடாக கோயில் சொத்தை அபகரிக்க போலி பட்டா வழங்கியதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ரத்து செய்து, மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கை கடந்த ஐந்தாண்டுகளாக நிலுவையில் வைக்க துணைபோன இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியாக, கோயிலின் பெயரில் அறக்கட்டளை வைத்து ஏமாற்ற துணிந்துள்ளனர். முறைகேடாக பட்டா தருவதற்கு துணைபோன அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது கடந்தகால அரசு துறை செயல்பாட்டை பரிசீலிக்க வேண்டும்.