ஜூலை 1-ம் தேதி முதல் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் ஏற்பட்டபோது, நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, மீண்டும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனினும், மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய தூர சாதாரண கட்டண ரயில்களும் சிறப்புரயில்களாக இயக்கப்படுகின்றன. இதனால், இந்த வகை ரயில்களுக்கு தற்காலிமாக, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 1 முதல் வழக்கமான பயணிகள் ரயிலாக இயக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய எண்கள் 5, 6, 7 ஆகிய எண்களில் தொடங்குகின்றன. பயணிகள் டிக்கெட் எடுக்கும்போது, அதில் புதிய எண்கள் இடம்பெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டபோது, இந்த ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டது. எனவே, முன்பு இருந்ததுபோல குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 10 ஆக குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.