வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

77பார்த்தது
வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்
பள்ளி ஆய்வுப் பணியில் மெத்தனமாக இருந்த வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் ஜெ. மேரி ஜோஸ்பினை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் பி. ஏ. நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில், திருவள்ளூர் வருவாய் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டம் வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பம்மாத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மாணவர் எண்ணிக்கை பதிவில் முறைகேடு செய்து ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் தவறான தகவல்களை அளித்து அரசுக்கு மிகப்பெரிய அளவில் பணஇழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வேண்டிய வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலரான மேரி ஜோஸ்பின் அப்பள்ளியை சரியாக கண்காணிக்காமலும், ஆய்வு மேற்கொள்ளாமலும் இருந்துள்ளார். மிகப் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் பொதுநலன் கருதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். இதைத் தொடர்ந்து அவர் உரிய அதிகாரியின் முன் அனுமதி இல்லாமல் வில்லிவாக்கத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி