அரியலூர் எண்ணெய்க்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் அரியலூர் மாவட்ட கலெக்டர், தாசில்தார் மற்றும் தேர்தல் பணிகள் உள்ள அரசு அதிகாரிகள் தொடர்பாகவும், அரசியல் கட்சிகளுக்கும் இடையே பகை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும், அவதூறாகவும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளங்கள் பதிவு செய்தார்.
இது குறித்து அரியலூர் போலீஸ் நிலையத்தில் அரியலூர் தாசில்தார் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கடந்த 31 ஆம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் முருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட எஸ். பி செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.