கேரளாவின் இடுக்கி மாவட்டம் பைனாவிலில் இரண்டு வயது சிறுமி தியா என்பவரின் உடலில் உறவினர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தடுக்க சென்ற சிறுமியின் பாட்டி அன்னக்குட்டி (57) என்பவரும் படுகாயம் அடைந்தார். அன்னக்குட்டியின் மகளின் கணவரான கஞ்சிக்குழி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். குடும்பப் பிரச்சனை தொடர்பாக பேச வந்த இடத்தில் அன்னக்குட்டிக்கும், மருமகன் சந்தோஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சந்தோஷ் சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.