தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், குளம், குட்டைகளில் நீர் நிறைந்துள்ளது.
இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டக்கூடிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவ மழையினால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆறுகள், கண்மாய், குளம், மற்றும் குட்டைகளில் குளிப்பதற்கு பாதுகாப்பு எல்லையை மீறி யாரும் செல்ல வேண்டாம் எனவும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள நீர்வீழ்ச்சிகள், ஓடைகளில் திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் குழந்தைகளை ஆறுகள், கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.