சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன், இன்று நவ. 19 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், என். வெங்கடேசவரபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ. 3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டதையும், என். வெங்கடேசவரபுரம் ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ், தலா ரூ. 47,000 மதிப்பில், வீடுகள் புனரமைக்கப்பட்டதையும் என். சுப்பையாபுரம் ஊராட்சியில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ள பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.