ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி துவங்கியது. தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் பல்வேறு வகையான அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான நேற்று இரவு முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
அதற்கு முன்னர் மைய மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் உற்சவர் வெள்ளை பட்டு உடுத்தி மணக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வள்ளி, தெய்வானை தேவியர் மணக்கோலத்தில் எழுந்தருள, மூவரையும் பக்தர்கள் சஷ்டி மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். அங்கு சிவாச்சாரியார்கள் முன்னிலையில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண பூஜைகள் துவங்கின. பூஜையின் முடிவில் சுப்ரமணியசுவாமி இருவருக்கும் தாலி அணிவிக்க பக்தர்கள் அட்சதை தூவி அரோகரா கோஷம் முழங்கி வணங்கினர். அதனைத் தொடர்ந்து மாலை மாற்று வைபவமும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.