சிவகாசி: தொடர் சாரல் மழை. காலண்டர் உற்பத்தி கடும் பாதிப்பு...

60பார்த்தது
சிவகாசியில் தொடர் சாரல் மழை. காலண்டர் தயாரிப்பு பணிகள் கடும் பாதிப்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், வரும் '2025'ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர்கள் மற்றும் மாதக் காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் காலண்டர் சீசன் துவங்கினாலும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலண்டர் உற்பத்தி செய்யும் பணிகள் உச்சத்தில் இருக்கும். தினசரி காலண்டர்களில், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் உள்ளிட்டவைகள் படங்களில் அச்சிடப்பட்டு அவைகள் மவுண்ட் எனப்படும் அட்டைகளில் ஒட்டி நன்றாக காய வைப்பார்கள். நன்றாக வெயில் இருந்தால் தான் காலண்டர் மவுண்ட் அட்டைகள் காய்ந்து வளையாமல் இருக்கும். தினசரி காலண்டர் தயாரிப்பு பணியில் இந்தப் பணி தான் முதன்மையானதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவகாசி பகுதிகளில் வெயில் குறைவாகவும் அவ்வப்போது தூறல் மழை பெய்து வருவதாலும் காலண்டர் தயாரிக்கும் பணிகள் சற்று பாதிக்கப்பட்டு வந்தன. இன்று காலையிலிருந்து தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் காலண்டர்களை தயாரித்து அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காலண்டர்கள் தயாரிப்பாளர்கள் கவலையுடன் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி