இராஜபாளையத்தில் மகா தேவ அஷ்டமி மற்றும் கால பைரவ ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து சிலர் நூதன முறையில் வழிபாடு.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே முடங்கியாறு சாலையிலுள்ள அக்ரஹாரம் தெருவில் ருக்மணி சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால் கிருஷ்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் மகா தேவ அஷ்டமி மற்றும் காலபைரவ ஜெயந்தியை முன்னிட்டு இன்று பகலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஹரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த உணவை உண்பதால் அனைத்து விதமான நோய்களும் தீரும் என்பது ஐதீகம். மேலும் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் போது, புத்திர பாக்கியம் திருமண தடை மற்றும் வியாபார விருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் இலைகளை தலையில் வைத்து எடுத்து சென்று அப்புறப் படுத்தினர். இந்த விநோத வழிபாட்டில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.