விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்த இடத்தை சென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மரக்காணம் வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவைத் துறையினர் இடத்தை அளவீடு செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதால் அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர், ஷெட் ஆகியவைகளை உடனே அகற்றும் படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று முன்தினம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய்த் துறையினர் கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை பெக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.