தண்ணீரின்றி கருகிய துவரை பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

76பார்த்தது
தண்ணீரின்றி கருகிய துவரை பயிர்கள்: விவசாயிகள் வேதனை!
வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே துவரை பயிர் பயிரிடப்படுகிறது. பொய்கை அருகே பிள்ளையார்குப்பம், கந்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் துவரை பயிர் பயிரிட்டு வருகின்றனர். இந்தநிலையில் வேலூர் அருகே பிள்ளையார்குப்பத்தில் பயிரிடப்பட்டுள்ள துவரை பயிர்கள் வெயில் காரணமாகவும், தண்ணீரின்றியும் கருகி உள்ளது.

இதனால் அந்த செடிகளை விவசாயிகள் அழித்து வருகின்றனர். கோடை காலம் என்பதால் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்டுபோய் காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கிணற்று நீர் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் பலர் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், நாங்கள் துவரை பயிர்களை பயிரிட்டு பராமரித்து வந்தோம். இந்த செடியில் கடந்த டிசம்பர் மாதத்தில் அறுவடை செய்தோம். மீண்டும் அறுவடை செய்ய காத்திருந்தோம். ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தினால் செடிகள் கருக தொடங்கின.

வெயிலும் கடுமையாக இருப்பதால் செடிகள் சீக்கிரமாக காய்ந்து விட்டன. இதனால் துவரையில் முழுமையான பலன் கிடைக்கவில்லை. எனவே வேறு வழியின்றி அந்த செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதையடுத்து வரும் நாட்களில் பருவ மழை பெய்தால் மீண்டும் துவரை அல்லது வேறு பயிர்களை பயிரிடும் பணியை தொடங்குவோம் என்றனர்.

தொடர்புடைய செய்தி