வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே வணிக வளாகத்தில் முதல் மாடியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் தினமும் பைக்கில் வந்து செல்கிறார். நேற்று (நவம்பர் 19) இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பைக் எடுக்கச் சென்றுள்ளார். அப்போழுது பைக் அங்கு திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அதிர்ச்சியடைந்த அவர் அவரது நிறுவனத்தின் மூலம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை சோதனை செய்தார். அதில் குடிபோதையில் ஒருவர் பைக்கை உடைத்து அங்கிருந்து திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. மேலும் இது குறித்து குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே பூட்டிய கடை முன்பு அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அதன் அருகில் பைக் திருடிச் சென்றவர் குடிபோதையில் விழுந்து கிடந்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பைக்கை அதன் உரிமையாளரிடம் மீட்டுக் கொடுத்தனர். பின்னர் குடிபோதையில் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.