திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 350 லிட்டர் டீசல் திருட்டு! மர்ம நபர்கள் கைவரிசை சேலம் மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் உதயகுமார் (32) இவர் என்எம் ட்ரான்ஸ்போர்ட்டில் ஐந்து வருடங்களாக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மேட்டூரில் இருந்து நேற்று இரவு விஜயவாடாவிற்கு மெக்னீசியம் சல்பேட்டை ஏற்றிக்கொண்டு பெங்களூர் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது தூக்க கலக்கம் காரணமாக நேற்று இரவு 2.30 மணி அளவில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் தேசிய நெடுஞ்சாலை அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் லாரியில் டீசல் டேங்கில் இருந்த பூட்டை உடைத்து டேங்கில் இருந்த சுமார் 350 லிட்டர் அளவிலான டீசலை திருடி சென்றுள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது டீசல் டேங்க் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் டீசல் திருட்டு போனதையும் தெரிந்து கொண்டார்.
அதன் பின்பு இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.