திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வீதியில் விளையாடும் குழந்தைகள் மற்றும் பைக்கில் செல்லும் நபர்களை விரட்டி சென்று கடித்து விடுகின்றன. நாய்களால் கடிபட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆரணி அடுத்த வடுக்கசாத்து, சேப்பாக்கம், சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று இரவு வெறிநாய் ஒன்று திடீரென புகுந்தது. அப்போது, சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள், பைக்கில் சென்றவர்கள், பொதுமக்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை அந்த வெறிநாய் கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் பீதியில் அலறி அடித்து கொண்டு ஓடினர். வெறிநாயும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.
இந்நிலையில், வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மகன் ஜீஸ்னு(7), வடுக்கசாத்து கிராமத்தை சேர்ந்த சுதர்சன்(5), யுவா (15), ராஜா(7), வெங்கடேஷ்(17), அக்ஷயா(4), விசாலட்சி(41) உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.