ரகளை செய்ததை தட்டிகேட்ட போலீசை தாக்கிய
போதை வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
குமார் நகர்-அங்கேரிபாளையம் ரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள ஒரு பேக்கரி முன்பு நேற்று மாலை போதையில் வாலிபர் ஒருவர் ரோட்டில் செல்பவரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார் தகராறு செய்தவரிடம், ரோட்டில் செல்பவரிடம் தகராறு செய்யக்கூடாது என கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த போதை வாலிபர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமாரை நெஞ்சில் கை வைத்து தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போதை வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய போலீசார் போதை வாலிபரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (35) என்பதும் அவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து காயமடைந்த மீனாட்சி சுந்தரத்தை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.