திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா வயது 19. இவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அன்று திருச்சி சண்முகா நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போழுது கையசைத்து இருசக்கர வாகனத்தை நிறுத்திய மர்ம நபர் ஒருவர் அபிமன்யுவிடம் அவசரமாக போன் செய்ய வேண்டும் எனக் கூறி, அவரது செல்போனை கேட்டுள்ளார்.
இவரும் தன் விலை உயர்ந்த ஃபோனை அவரிடம் கொடுத்துள்ளார். செல்போனை பெற்ற நபர் போன் ஏதும் பேசாமல் கத்தியை எடுத்து அபிமன்யுவின் முகத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து அபிமன்யு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஸ்ரீரங்கம் ஜெயம் நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து வழக்கு நடைபெற்ற நிலையில் நேற்று (நவம்பர் 20) இந்த வழக்கில் நீதிபதி மீனாசந்திரா குற்றவாளி ஸ்ரீராமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.