பள்ளி, கல்லூரி இளைஞர்கள் தற்போது ரீல்ஸ் மோகத்தில் இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட்லிருந்து சென்னை நோக்கி உயர்ரக இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி செல்லும்போது காரில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சென்ற இளைஞரை வீடியோ எடுத்தும் வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து அந்த மாணவர்களை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்றனர், மேலும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்தனர். சாகசத்தில் ஈடுபடுத்திய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து இதுபோன்று இனிமேல் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.