தூத்துக்குடி மாவட்டம் உள்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாமிரபரணி ஆறு கடலில் கலக்கக்கூடிய இடமான தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் ஊருக்குள் இந்த வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் அங்குள்ள வீடுகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அரசு சார்பில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. மேலும் இந்த கிராமத்தில் வெள்ளநீர் வடிவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த கிராமத்திற்கு நேரில் சென்று கிராமமக்களை சந்தித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து வகையான உதவிகளையும் செய்தார்.
மேலும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் அந்த கிராமத்தில் முகாமிட்டு, அந்த மக்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. தற்போது அந்த கிராமத்தில் இருந்து மழைநீர் முழுவதுமாக வடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் அவர்களின் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும் மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.