திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ளது நாலாநல்லூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் கணேசன் சந்திரா தம்பதியரின் மூன்றாவது மகள் சுதா. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றுள்ளார். பிறகு திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு தகுதியின் அடிப்படையில் திருநெல்வேலியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
அவருடைய படிப்பு கல்வி நிலையை அறிந்த திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்தவர்கள் அவரை நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூறியுள்ளார்கள். அதன்படி அவர் தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பிறகு திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களின் உதவியோடு தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று அதன் பிறகு நடைபெற்ற தேர்விலும் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்டத்திலேயே தற்போது நடந்த நீதிபதி தேர்வில் சுதா மட்டும் நீதிபதியாக தேர்ச்சி பெற்று உள்ளார்.