விருகம்பாக்கம் அருகே சந்தேகத்தால் 2வது மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் (43). ஆட்டோ ஓட்டுனரான இவர், பஷ்பா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புஷ்பாவின் மீது சந்தேகம் அடைந்த திருமுருகன், அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் பழக்கம் போல் குடித்துவிட்டு மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்த திருமுருகன், பின்னர் அதே பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரது தாயின் வீட்டிற்கு புஷ்பா சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட கடும் கோபமடைந்த திருமுருகன் தான் வைத்திருந்த சிறிய கத்தியை புஷ்பாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக புஷ்பாவின் மகள் சௌந்தர்யா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை கொலை செய்த திருமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.