அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருகே உள்ள ஒரு மைதானத்தில் அமைந்துள்ள புதர் பகுதியில், மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் டில்லி பாபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, சம்பவ இடத்அதிற்குச் சென்ற காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையிலான அம்பத்தூர் போலீசார், புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த குட்காவை பதுக்கி வைத்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுமட்டுமல்லாது, குட்கா வைக்கப்பட்டிருந்த புதர் அருகே போலீசார் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர்.
அப்போது, புழல் பகுதியைச் சேர்ந்த புழல் கண்ணன் என்ற கண்ணன் என்பவர், மற்றொரு நபருடன் குட்கா வைக்கப்பட்டிருந்த புதருக்கு வந்ததாகவும், அங்கேயே புழல் கண்ணனை கையும் களவுமாக போலீசார் பிடித்தபோது, அவருடன் வந்த அவரது கூட்டாளி அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, பிடிபட்ட புழல் கண்ணனிடம் விசாரித்ததில், கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்வேறு குட்கா பொருட்களைக் கடத்தி வந்து மறைத்து வைத்திருந்ததும், அந்த குட்காவை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் சில்லறை விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.