ஒரத்தநாடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூரை சேர்ந்தவர் அன்னதாஸ் (வயது 65). இவர் கடந்த 2023-ம் ஆண்டு 7 வயது சிறுமிக்குபாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் ஓரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த சுகந்தி வழக்குப்பதிவு செய்து அன்னதாஸை கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தஞ்சை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து அன்னதாசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்தவழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.